எம்.ஜி.ஆர். நினைவு நாள் : தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் – எடப்பாடி பழனிசாமி!

தீயசக்தி திமுக-வின் மக்கள் விரோத ஆட்சிக்கு தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம்..

வறியவர்களின் வேதனையைத் தன் வேதனையாகக் கொண்டு, அன்பையும், அருளையும் அரசியலாக்கிய மக்கள் திலகம், நம் இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிச் சென்ற நமது வாழ்நாள் வழிகாட்டி, தமிழ்நாட்டின் சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் என எந்தத் துறையை எடுத்தாலும், அவற்றின் வரலாற்றைச் செதுக்கிய சிற்பியாகத் திகழ்ந்த ஒப்பாரும் மிக்காருமற்ற முதலமைச்சர், திராவிட இயக்கத்தின் திரைமுகமாய், எளிய மக்களிடம் இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தப் பேராளுமை,

பேரறிஞர் அண்ணாவின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் தன் கொள்ளைக் காடாக மாற்றத் துடித்த போது, அதிமுக எனும் மக்களாட்சி விழுமியங்களைக் காத்து நிற்கும் அண்ணா வழிப் பேரியக்கத்தைக் கண்ட நம் கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்றும், இன்றும், என்றும் எங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர்.

மாண்புமிகு “பாரத ரத்னா” இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை வணங்குகிறேன். புரட்சித்தலைவரின் பெரும் புகழையும், சரித்திர சாதனைகளையும் ஏந்தி நிற்கும் நம் உயிருக்கு ஒப்பான நம் கழகம்,

புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தைக் கண்டெடுத்த நோக்கத்தை, தலைவர் எப்படி நிறைவேற்றிக் காட்டினாரோ, அதேபோல் மீண்டும் நிறைவேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை இன்றைக்கு நமக்கு இருப்பதை உணர்ந்து, தீயசக்தி திமுக-வின் மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.