கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது. இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிரப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து கேரளாவின் அண்மை மாநிலமான தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் மூலம் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் விடுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு சம்பவ இடத்தில் இருந்து அதற்கு சற்று முன்னதாக நீல நிற சொகுசு கார் சந்தேகப்படும்படி கிளம்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







