”இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்!” – பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு

இந்தியா துணை நிற்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி…

இந்தியா துணை நிற்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி செய்து வருகின்றனர். இந்த அமைப்புக்கு பாலஸ்தீனம் ஆதரவு. இஸ்ரேல் இந்த அமைப்பை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

காஸா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பாலஸ்தீனமும் பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (அக்.7) இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். வான் வழியிலும் தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுவரை 900 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பிரதமர் மோடி, இஸ்ரேல் மக்களுக்கு இந்திய அரசு துணை நிற்கும் என X தள பதிவில் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது, இந்தியா துணை நிற்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார். தொலைபேசியில் தன்னுடன் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேலியர்களுக்கு இந்தியர்கள் உறுதுணையாக இருப்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.