திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் ; திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பட்டத்தில் ஏராளமான விசிகவினர் கலந்து கொண்டனர் . தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர்  திருமாவளவன்,

”திருப்பரங்குன்றம் பற்றி பேச நான் இந்த மண்ணின் சொந்தகாரன் என்ற தகுதி போதும். நான் பூசிய விபூதியை கொண்டு அரசியல் செய்தார்கள். விபூதியை பூசியது என்பது பிரச்சனை இல்லை விபூதியை அழித்தேன் என்பதுதான் பிரச்சனை. அவதூறுகளை பரப்பலாம் அரசியல ஆதாயம் தேடலாம் என்பதுதான் அந்த கும்பலின் நோக்கம்.

இந்தியாவில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கொடுமைகளுக்காக என்றாவது ஒரு நாள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் போராடிய சான்று இருக்கிறதா..? உயர்கல்விழி இன்று இந்துக்கள் எத்தனை பேர் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த அளவிற்கு பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் வளர்ச்சி அடைந்துள்ளனரா..?.

ஆர்எஸ்எஸ் பாஜகவினர்,பெரும்பான்மை வாத பேசி ஆட்சியை தக்க வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் முதலாளிகளுக்கு கார்ப்பரேட் மயமாக்கிவிட்டு இந்துக்களை ஓட்டாந்திகளாகி வெளியே நிறுத்துவது தான் ஆர்எஸ்எஸ் கும்பலின் சதி திட்டம். ஆர்எஸ்எஸ் கும்பலின் துணைக்கு போகின்ற ஒவ்வொருவரும் இந்து மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் விளைவிக்கிறார்கள் என்று தான் பொருள்.
முருகனை ஸ்கந்தர், சுப்ரமணியன் என்கிறார்கள். சுப்ரமணியனுக்கு இன்னொரு பெயர் ஸ்கந்தன். சுப்ரமணியன் என்பது வடமொழி பெயர்.

ஆர்.எஸ்.எஸ்., இந்துக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. அது பிராமணர்களால், பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அண்ணாமலை, நயினார், தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் இருவரை அடையாளம் கண்டு விட்டார்கள். ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். விஜயும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது.

வேங்கைவயல் விவகாரத்தில் விசிக அளித்த அழுத்தம் காரணமே சிபிஐ விசாரணை செய்தது. அமித்ஷாவும், மோடியும் வேங்கைவயல் பிரச்சனைக்காக பேசினார்களா..?  தேர்தல் வரும் போகும். இந்த மண்ணின் மக்களை காப்பாற்ற வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.