அமெரிக்கா சார்பில் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த விபரங்களை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் வெளியிட்ட விவரங்களாவது:
இந்தியாவில் தூய்மையான எரிசக்தி உற்பத்தியை ஊக்குவித்து முக்கிய விநியோக சங்கிலிகளை பன்முகப்படுத்துதல்:
டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட்டிற்கு முழுவதும் சொந்தமான அதன் துணை நிறுவனமான டிபி சோலார் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் $425 மில்லியன் கடன், இந்தியாவில் ஒரு கிரீன்ஃபீல்ட் 4 ஜிகாவாட் சோலார் செல் மற்றும் 4 ஜிகாவாட் சோலார் மாட்யூல் உற்பத்தி வசதிக்கான கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்கு நிதியளிக்கும். இந்த முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான இந்தியாவின் லட்சியத் திட்டத்திற்கு ஆதரவளித்து, சீன ஆதிக்கத்தில் இருந்து விலகி விநியோகத்தைப் பல்வகைப்படுத்தும் உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கு வலுவூட்டும்.
இந்தியாவில் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்துதல்:
எஸ்ஏஈஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் $35 மில்லியன் பங்கு முதலீடு, சூரிய சக்தி மற்றும் கழிவில் இருந்து மின்சக்தி உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், இந்திய எரிசக்தி துறையை பல்வகைப்படுத்தவும் நிதியளிக்கும்.
இந்தியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கான நிதியுதவி அணுகலை அதிகரித்தல்:
அங்க்கூர் கேப்பிடல் ஃபன்ட் III-இல் மேற்கொள்ளப்படும் $15 மில்லியன் பங்கு முதலீடு இந்தியாவில் உள்ள புதுமையான, ஆரம்ப-நிலை தொழில்நுட்ப நிறுவனங்களை ஆதரிக்க மூலதனத்தை வழங்கும்.
குறைந்த செலவிலான சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய அணுகலை அதிகரித்தல்:
ஜெனெசிஸ் பயாலஜிக்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு வழங்கப்படும் $50 மில்லியன் கடன், இந்தியாவில் அதன் இன்சுலின் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்த உதவும். இதன் மூலம் முக்கியமான நீரிழிவு சிகிச்சைகள் உலகளவில் அதிக அளவிலும் குறைந்த செலவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல்:
லீப் இந்தியா ஃபுட் & லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்கப்படும் $33 மில்லியன் கடன் இந்தியாவில் உணவு சேமிப்பு முறையை நவீனமயமாக்கி உள்ளூர் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தானியக் கிடங்குகளைக் கட்டமைக்க உதவும்.
இந்தியாவில் பருவநிலை நிதியை மேம்படுத்துதல்: க்ளைம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் $10 மில்லியன் கடன், இந்தியாவில் பருவநிலை தகவமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனளிப்பதை ஆதரிக்கும்.
கிராமப்புற இந்தியாவில் நிதிசார்ந்த உள்ளடக்கத்தை விரிவுபடுத்துதல்: பஹல் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் $12 மில்லியன் கடன், இந்தியாவின் கிராமப்புற மற்றும் பேரூர் பெண்களை இலக்காகக் கொண்டு, நிறுவனத்தின் குறுநிதி வழங்கலை விரிவுப்படுத்த உதவும்.
இந்தியாவில் மலிவு விலை வீடுகளை அதிகரித்தல்: உம்மீத் ஹௌஸிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு வழங்கப்படும் $20 மில்லியன் வரையிலான கடன், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சமூகங்களுக்குக் கிடைக்கக்கூடிய வீட்டு கடன்களை விரிவுபடுத்தும். இந்தியாவில் மலிவு விலையிலான வீடுகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இது உதவுவதோடு வீட்டு உரிமையாளர்களாக பெண்கள் திகழ்வதை ஊக்குவிக்கும்.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவுதல்: இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர மின்சார ரிக்ஷாக்களுக்கான பேட்டரி மாற்ற குழுமத்தை நிர்வகிக்கும் நிறுவனமான அப்க்ரிட் எலக்ட்ரிலீஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு (பேட்டரிஸ்மார்ட்) வழங்கப்படும் $10 மில்லியன் கடன், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுவதை ஆதரிக்கும்.
இந்தியாவின் மறுசுழற்சித் திறனை விரிவுபடுத்துதல்: டால்மியா பாலிப்ரோ இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் 30 மில்லியன் டாலர் வரையிலான கடன், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் இந்தியாவின் திறனை விரிவுபடுத்தி, நுகர்வோருக்குப்-பிந்தைய மறுசுழற்சி வசதியைக் கட்டமைக்க உதவும்.
இந்தியாவில் புதுமையான உணவுப் பாதுகாப்பு தீர்வுகளை ஊக்குவித்தல்: சயின்ஸ் ஃபார் சொசைட்டி டெக்னோ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் $8.9 மில்லியன் கடன், தூய்மையான எரிசக்தி விரிவாக்கம், ஃபார்ம்-கேட் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிவகுத்து, உணவுக் கழிவுகள் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, கிராமப்புறப் பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும்.
இவ்வாறு அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.







