தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்களை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாக்களித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் வாக்குச்சாவடியில் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதிவுடன் வாக்களித்தார். இதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

பாமக தலைவரும் பென்னாகரம் தொகுதியின் வேட்பாளருமான ஜிகே மணி, பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அஜ்ஜன அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
அதேுபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான கீரப்பாளையத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வாக்களித்தார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரிபள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை அடையாறில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாக்களித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தார்.
