மதுரையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் அன்றாடம் பல வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. திமுக அரசை எதிர்த்து குறிப்பாக ஒரு பக்கம் ஆசிரியர்கள் அதில் இளநிலை ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள் மாணவர்கள், பெண்கள் மதுக்கடைக்கு எதிராக இப்படி தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
திமுக மீது மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். இவர்கள் கொடுத்த வாக்குறுதியில் 13 சதவீதம் தான் நிறைவேற்றி உள்ளார்கள். மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்கு செலுத்த முடிவு செய்துவிட்டார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக படு தோல்வி அடையும்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் தொழில் வளர்ச்சி மைனஸில் உள்ளது. கடந்த ஆண்டு 3.8, இந்தாண்டு 1.8 எந்த ஆட்சியிலும் இப்படி இருந்தது கிடையாது. உழவர்கள் பயிர் இழப்பீடு கேட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் நிர்வாகம் என்பது கிடையாது முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கடன் மட்டும் வாங்கி இருக்கிறார்கள் ஒன்பது லட்சத்து 55 ஆயிரம் கோடி. இந்தியாவில் அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. அதிக வட்டி கட்டும் மாநிலம் தமிழ்நாடு 68,000 கோடி ஆண்டுக்கு வட்டி கட்டுகிறார்கள்.
கனிமவள கொள்ளை தென் மாவட்டத்தில் காட்பாதர் ஒருத்தர் உள்ளார். அவர் தான் எல்லாத்துக்கும் பாதுகாவலர் மேற்கு தொடர்ச்சி மலை ஒரு வரம், அதை அழித்து நாசமாக்க வேண்டும் என்ற ஒரு முடிவில் இருக்கிறார்கள். சமூக நீதி என்று பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது. தகுதி இழந்துவிட்டார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காத ஒரு முதல்வர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் தான் ஸ்டாலின், கர்நாடகா, தெலுங்கானா, ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து விட்டார்கள். தமிழ்நாட்டில் சமூக நீதி அல்ல சமூக அநீதி தான் உள்ளது. பெரியார் பெயரைக் கூட சொல்ல தகுதி இல்லாதவர்கள்.
கர்நாடக நீதிமன்றத்தில் மத்திய அரசு மட்டும் அல்ல மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என தெளிவாக கூறியிருக்கிறார்கள் ஆனால் தமிழக முதல்வர் எங்களுக்கு அதிகாரம் இல்லை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என சொல்கிறார். தொழில் முதலீடு வந்துவிட்டது என பொய்யான தகவலை பரப்பினார்கள். இது தொடர்பாக நான் அதை புத்தகமாக வெளியிட்ட பின்பு அது குறித்து வாய் திறக்கவில்லை. 11 லட்சம் கோடி முதலீடு என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு லட்சம் கோடி தான் முதலீடு வந்துள்ளது.
பொய்யான ஒரு ஆட்சியை நடத்துகிறார்கள். நிச்சயமாக வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். அதனால் இருக்கும் இரண்டு மாதத்திலாவது மக்களுக்கு நல்லது செய்துவிட்டு போங்கள். இதைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் கூட்டணி கூட கேள்வி எழுப்பிய போது விரைவில் எங்கள் கூட்டணியை அறிவிப்போம். தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வி அடையும், எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இன்றைக்கு எங்கள் கூட்டணி குறித்து பேச முடியாது, நிச்சயமாக மெகா கூட்டணி உருவாகும் என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அதே வேளையில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள், தீர்ப்பை மதிக்க வேண்டும். பிரச்சனை இல்லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும். எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது எவ்வளவு தொகுதி கேட்க உள்ளீர்கள் என்ற கேள்விக்கு கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.







