கண்டாச்சிபுரம் அருகே சகோதரியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் வளர்ப்பு மகனே பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 40 வயதான கோவிந்தன் அதே கிராமத்தில் காப்புகாடு அருகில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலையம்மாள்(32). இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
அதே கிராமத்தை சேர்ந்தவர்தான் கண்ணன் என்பவரின் மகன் பாரதி. 23 வயதான பாரதி சிறுவயதிலே தாயை இழந்து தந்தை கண்டுகொள்ளாததால், பாரதியை கோவிந்தன் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தார். கோவிந்தனின் விவசாய நிலம் ஊருக்கு எல்லை பகுதியில் காப்பு காடு அருகில் உள்ளதால், அவர், அங்கையே வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒரு தலையைாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கோவிந்தனிடம் பாரதி கேட்டதாக தெரிகிறது. வளர்ப்பு பையனாக உன்னை கருதும் போது எப்படி உனக்கு மகளை திருமணம் செய்து வைக்க முடியுமென்று கூறி கோவிந்தன் மறுத்துள்ளார். இதனால் கோவிந்தன் மீது பாரதி ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, விவசாயி கோவிந்தனை சுட்டார்.
இதில் படுகாயம் அடைந்த கோவிந்தனின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அவரது மனைவி கலையம்மாளையும் பாரதி நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, இதனை கண்டதும் பாரதி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின்னர் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பாரதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வளர்ப்பு மகனே, வளர்ப்பு பெற்றோர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









