சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தொடங்குவதற்கு ஹிந்துஸ்தான் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதற்குத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கக் கூடாது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அப்பகுதியில் உள்ள மீனவ கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், சுற்றுலாத் தலமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் பிச்சாவரம் பகுதி இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும்.
குடிநீர் நஞ்சாகும் அபாயம் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பரங்கிப்பேட்டை அருகில் நடைபெறும் போராட்டங்களுக்கு விசிக தனது ஆதரவை வழங்குகிறது. மேலும் மக்களின் இந்த கோரிக்கையைத் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளோம்” என்றார்.
தவெக குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்களது விமர்சனங்களும், சந்தேகங்களும் இருந்தன. ஆனால், தற்போது அவர் மதச்சார்பற்ற அரசியலையே முன்னெடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள நிலையில், எங்களது ஐயங்கள் தெளிந்துள்ளன. தவெக-வின் இந்த மதச்சார்பற்ற கொள்கை எங்களை ஈர்த்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலை குறித்துப் பேசுகையில், “சங் பரிவார்களால் திட்டமிட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ள ஒரு தலைவராகவே அவர் பார்க்கப்படுகிறார். இது போன்ற அரசியல் நீண்ட காலத்திற்கு மக்கள் மத்தியில் நிலைக்காது” என்று விமர்சித்தார்.
இறுதியாக பேசிய அவர், “விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்த போது பேசியுள்ளோம். நிதி நெருக்கடிச் சூழலைக் கையாண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். மேலும், தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது மிகுந்த கவலையளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்குத் தமிழக அரசு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.




