எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை,…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை, மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டார். தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்ட அவர், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி எவரெஸ்ட் மலை அடிவார முகாமில் இருந்து ஏறத் தொடங்கி, மே 19- ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து சாதனை படைத்தார். அவருக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். எவரெஸ்ட் மலையேறி சாதனை படைத்த பின்னர் கடந்த மே 23 ஆம் தேதி சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, 51 நாள்கள் பயணம் மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் வந்தடைந்த முத்தமிழ் செல்விக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள இந்த இருவரையும் நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள சகோதரி முத்தமிழ்ச்செல்வி & சகோதரர் ராஜசேகர் பச்சை ஆகியோரை இன்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம். எவரெஸ்ட் மலையேற்றத்தின் வலிகள், சிரமங்களை அனுபவங்களாக எடுத்துக்கூறினர். மன உறுதியுடன் சிகரம் தொட்டு வந்துள்ள அவர்களின் உற்சாகம் இன்னும் பலருக்கு ஊக்கமளிக்கட்டும். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் இன்னும் பல சாதனைகளை புரிய தமிழக அரசு துணை நிற்கும் என கூறி பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Udhaystalin/status/1663484510380642304?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.