நீங்கள் வளர்க்கும் செல்ல பிராணி விபத்தில் சிக்கி விட்டதா? அல்லது நோய்வாய்ப்பட்டுள்ளதா? கவலை வேண்டாம்… ‘1962’ எனும் இலவச தொலைபேசி எண்ணை அழைத்தால் போதும்… உங்கள் வீட்டிற்கே கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிப்பார்கள்… அத்தகைய திட்டத்தின் சிறப்பம்சங்களை காண்போம்
தமிழ்நாடு அரசின் ‘1962’ இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திட்டமானது, அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரைக் காக்கும் நோக்கோடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் 5 மாவட்டங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, ‘1962’ எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே மருத்துவ ஊர்தி அனுப்பி வைக்கப்படும். இந்த மருத்துவ ஊர்திகளில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் தயார் நிலையில் இருப்பார்கள். இந்த ஊர்திகள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டாலும் கூட, 24 மணி நேரமும் கால்நடைகளுக்கான மருத்துவ உதவிகளை பெற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த சேவையால் பயனடைந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த மீனா கூறும்போது, “நாங்கள் பத்து ஆண்டுகளாக ஒரு நாட்டு நாய் வளர்த்து வந்தோம். அதற்கு திடீரென அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியவில்லை. அப்போது இந்த எண்ணில் அழைத்தோம். அவர்கள் வீட்டிற்கே வந்து எங்கள் செல்ல பிராணிக்கு மருத்துவம் பார்த்தனர். ஊசி போட்டுவிட்டதோடு, மருந்து மாத்திரைகளையும் எழுதித் தந்தனர். மேல் சிகிச்சைக்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கூறியதாக” தெரிவித்தார். வீட்டிற்கே வந்து சிகிச்சை அளித்தது மகிழ்ச்சியும் மனநிறைவையும் தந்ததாகக் கூறினார்.
கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசியக் கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை மருத்துவ ஊர்திகளில் உள்ளன. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றுவதற்காக ‘ஹைட்ராலிக் லிப்ட்’பொருத்தப்பட்டுள்ளது. மின்சார வசதியில்லாத இடத்தில் கூட இரவு நேரங்களில் சிகிச்சை அளிப்பதற்காக, வாகனத்துக்கு வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய பெரிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இனி உங்கள் செல்லபிராணிக்கு ஆபத்து என்றால் உடனே அழையுங்கள் “1962”