சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் – கமல்ஹாசன் வரவேற்பு…!

நடிகரும் மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் இன்று பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் லோகோவையும் ரோந்து வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், பெண்களுக்கு எதிராக நடப்பவர்களுக்கான தண்டனை கடுமையாக இருக்கும். குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.