பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ ஆண்டுவிழா நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரை, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ஒரு கறுப்பு நாள். நமது சகோதர சகோதரிகள் வீரமரணம் அடைந்தனர். இது எங்கள் புனிதத் தலத்தின் மீதான ஒரு இராணுவத் தாக்குதல். இந்திரா காந்தி அவர்களை (இராணுவத்தை) எங்கள் புனித இடத்திற்குள் பலவந்தமாக அனுப்பினார். இதை நான் விபத்து என்று கூறமாட்டேன். மாறாக இது ஒரு திட்டமிட்ட செயல். இதில் நமது சகோதர சகோதரிகள் பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை” என்றார்.
கிரிஷ் மகாஜனின் இந்த பேச்சு பஞ்சாப் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிஷ் மகாஜனின் கருத்தினை விமர்சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரிவினைவாத மற்றும் மதவாத சித்தாந்தத்தை பஞ்சாப் நீண்ட காலத்திற்கு முன்பே நிராகரித்துவிட்டது. உங்கள் தேர்தல் ஆதாயங்களுக்காக அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்காதீர்கள்.
அற்பமான தேர்தல் ஆதாயங்களுக்காக நெருப்புடன் விளையாடாதீர்கள். பஞ்சாபியர்கள் உங்களையும் உங்கள் பிரிவினைவாத செயல்திட்டத்தையும் சித்தாந்தத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுடன், பஞ்சாபில் அமைதியை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சிதான் மிகப்பெரிய விலையைக் கொடுத்தது. சித்தாந்த உறவினர்களைப் போல, நீங்கள் இப்போது ஆதரித்துத் தழுவிக்கொண்டிருக்கும் அதே சித்தாந்தத்தின் வெறுப்பினால், நாம் ஒரு பிரதமரையும் ஒரு முதலமைச்சரையும் இழந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.




