மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளியே வரும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காவல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பெரும்பாலான குற்றசம்பவங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பொள்ளாச்சி பாலியல் புகார் விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்களும், திமுகவினரும் போராடினார்கள். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் ஒருவர் அதிமுக இளைஞரணி நிர்வாகி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு நீதிமன்றம் அமைத்துள்ளோம். 3 மாதங்களுக்கு முன் விசாரணை தொடங்கப்பட்டு இதுவரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
கோடநாடு விவகாரத்தில் இபிஎஸ்-க்கு ஏன் முரண்பாடு?
கோடநாடு வழக்கு சம்பவம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முகாம் அலுவலமாக பயன்படுத்திய பங்களாவில், மர்மமான முறையில் கொலை கொள்ளை நடைபெற்றுள்ளது. ஆண்டுகள் பல உருண்டொடிய காரணத்தினால் சில விஷயங்களை முழுமையாக வெளிகொண்டு வர தாமதமாகிறது. ஆனால் சி பி சி ஐ டி விசாரணையில் பல உண்மைகள் வெளிவருகின்றன. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுகளில் நிறைய முரண்பாடு உள்ளது. ஏன் இந்த தடுமாற்றம் என தெரியவிலை. கோடநாடு கொலை, கொள்ளையை அப்போதய முதலமைச்சரே மறைக்க முற்படும் போது திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்?. சி பி சி ஐ டி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும்.
போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
10 ஆண்டு கால ஆட்சியில் இருந்த அதிமுகவினர் விட்டுச் சென்ற போதைப்பொருட்களை, திமுக ஆட்சிக்கு வந்ததும் கைப்பற்றினோம். தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் போதாது. மக்களுக்கு நெருக்கமாக சென்று திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக தான் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கினோம்.
5-வது காவல் ஆணையம் அமைப்பு
தமிழ்நாட்டை காவலர்கள் பாதுகாக்கும் போது, அவர்களை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் காவல் ஆணையம் முறையாக அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5-வது காவல் ஆணையம் அமைத்துள்ளோம்.
பெண் காவலர்கள் – தமிழ்நாடு முதலிடம்
ஜூன் 3 ஆம்தேதி மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆரம்பமாகிறது. தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தியாவில் பெண் காவலர்களை அதிக கவனம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் உண்டு.
பெண்களுக்கான அவள் திட்டம்
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் திட்டங்களை தொடங்கி வைத்தேன்.அன்றைய தினமே பெண் காவலர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தேன். தமிழ்நாட்டில் பெண் உரிமையை உறுதி செய்யும் வகையில் பெண் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. காவலர் பணியிடங்கள் தொடர்பாக தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
நீண்டகால சிறைவாசிகள் விடுதலை எப்போது?
10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறைதண்டனை முடித்த சிறைவாசிகள், தீராத நோயுற்ற, மாற்றுத்திறனாளி நிலையை மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் முன் விடுதலைக்கு பரிந்துரை வழங்க நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆதிநாதன் குழு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. அதிகாரிகள் சட்டவல்லுநர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
காவலர்கள் எந்தவித குறுக்கீடுமின்றி சுதந்திரமாக செயல்படுகின்றனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக செயல்பட்டு வருகிறது . சட்டமன்ற உறுப்பினர்கள் காவலர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். 21 அலுவல் நாட்களில் அவை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- பி.ஜேம்ஸ் லிசா










