சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே இன்று காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் செயின்ட்…

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே இன்று காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் செயின்ட் தாமஸ் மவுண்ட் யார்டில் பல்வேறு தொழில்நுட்ப பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தாம்பரம் முதல் கடற்கரை வரை காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை செயல்படும் ரயில்களும், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணிவரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

  • செங்கல்பட்டு – சென்னை கடற்கரையிடையே காலை 11.00 மணிமுதல் மதியம் 2.20 மணிவரை இயக்கப்படும் ரயில்கள்,
  • செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
  • காஞ்சிபுரம் – சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
  • திருமால்பூர் – சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து.
  • அதேபோல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே, காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20 மற்றும் 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15 மற்றும் 2.30 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இன்று பல்லவன் அதிவிரைவு தொடர்வண்டி மற்றும் வைகை அதிவிரைவு தொடர் வண்டி இரண்டு ரயில்களும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் – செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் இடையே 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே கோட்டம் அறிவித்ததையடுத்து, பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் படி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை காலை 8 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.