கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார்.
சென்னை பள்ளிக்கரணையில், திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பின்னர் சாலையில் சென்றவர்களுக்கு இளநீர் வழங்கினார். அதனை தொடர்ந்து குளிரூட்டப்பட்ட அங்கன்வாடியையும், சிறுவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தவர், அங்கன்வாடி சிறுவர்களை வைத்து குத்துவிளக்கேற்றி, சிறுவர்கள் விளையாடுவதற்கான பொம்மைகளையும் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே, புதிய உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், எஸ்பிபி, பிஏ 2 போன்ற வைரஸ்கள் இன்றைக்கு மீண்டும் உலகை அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. கடந்த காலங்களில் துபாய், சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகள், நமது நாட்டில் இருக்கிற பன்னாட்டு விமான நிலையங்களான திருச்சி, கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களுக்கு வரும் பொழுது ரேண்டமாக 2% என்கிற அளவில் பரிசோதனை செய்யபப்டுவார்கள். அப்போது 2 அலல்து 3 நாட்களில் பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு பாதிப்பு என்கின்ற அளவில் தான் இருக்கும்.
ஆனால் தற்போது தினந்தோறும் 8, 10 பேருக்கு மட்டுமே அந்த பாதிப்பு இருந்து கொண்டிருக்கிறது. எனவே உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இந்தியா முழுவதும் சுமார் 2400-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் தினம்தோறும் 400, 500 என்கிற அளவிலான பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைக்கு மட்டும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 112 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தினந்தோறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் இந்த பரவலை தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூக விழாக்களாக இருந்தாலும், சமுதாய விழாக்களாக இருந்தாலும், அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் அங்கே பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முக கவசங்களை அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்புகளால் கழுவி கொள்வது போன்ற இந்த விதிமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடிப்பது என்பது நல்லது.
அந்த வகையில் இன்றைக்கு ஒட்டுமொத்தமாகவே இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பின் தன்மை என்பது உயர்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் மிதமான அளவுக்கான பாதிப்பே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னைக்கு போதுமான அளவுக்கு படுக்கைகளாக இருந்தாலும் ஆக்சிஜன் வசதியாக இருந்தாலும் மருந்து மாத்திரைகளாக இருந்தாலும் அனைத்தும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என மா .சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் பள்ளி மாணவி செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் தட்டி கேட்டதற்காக
மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து கேட்டதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்றைக்கு இருக்கும் குழந்தைகள் ஒரு திடமான திடகாத்திரமான மனநிலை இல்லாதவர்களாக இருப்பது என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. வாழ்ந்தே தீர வேண்டும், வாழ்ந்தாக வேண்டும், வாழ வேண்டும் என்கின்ற அந்த உறுதி தன்மை எல்லோரிடமும் இருக்க வேண்டும். தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்வது என்பது பிரச்சனைக்கு தீர்வாகாது. பிரச்சனைகளை எதிர்கொள்வதும், அவற்றிலிருந்து மீண்டு, தங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வது மட்டுமே ஒரு நல்ல மனநிலையாக இருக்க முடியும். எனவே அத்தகைய மனநிலைக்கு குழந்தைகள் முதல் அனைவருமே வர வேண்டும் என்பது தான் இன்றைக்கு எல்லோருடைய விருப்பம் என்று கூறினார்.
இதையடுத்து, ஸ்டீராய்டுமாத்திரைகள் எடுத்துக்கொண்டதால் உடற்பயிற்சியாளர் இறந்தது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மா சுப்பிரமணியன், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பழமொழி. உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி அல்லது மருந்து மாத்திரைகளை உட்கொள்கின்ற அளவாக இருந்தாலும் சரி. ஏதுவாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உட்கொள்வது அவசியம் அதைத் தாண்டி அதிகமாக எதை செய்தாலும் அது பாதிப்பை உண்டாக்குகிற ஒன்றாகத்தான் இருக்கும். உடல் கட்டமைப்பை காட்ட வேண்டும் என்பதற்காக அதிகமாக உட்கொள்வது என்பதும் இது மாதிரியான ஒரு விபரீதம் முடிவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.












