மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவை கூட்டத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் நடைபெற்ற சம்பவத்தை வைத்து கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவான விளக்கம் அளித்தார்.

திமுக படம் இடம்பெற்ற சட்டை அணிந்து இருந்தவர்கள்தான் போதைப் பொருட்களை பயன்படுத்தினார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். கஞ்சாவும், போதை வஸ்துக்களும் யார் ஆட்சிக் காலத்தில் வந்தது என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். கஞ்சா செடிகள் எங்கேயும் பயிரிடப்படாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : NCL 2023 : கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியை பந்தாடியது ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி

கஞ்சா செடி எங்கே இருக்கிறது என்ற தகவலை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தால், உடனே அங்கு காவல்துறையின்மூலம் அந்தச் செடியை அழித்து நடவடிக்கை எடுப்போம். தெலுங்கானா, ஒடிசா ஆகிய பகுதிகளில் இருந்து கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது என்று தகவல் வந்ததை அடுத்து, தமிழ்நாட்டின் உயர்காவல்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் 6,000 ஏக்கர் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.

கஞ்சாவை அழிக்க தமிழ்நாடு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதலமைச்சரும் அதற்காக போராடி வருகிறார். தமிழகத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் கஞ்சா அடித்துதான் நடப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். கஞ்சாவுக்கும் எடப்பாடிக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மருத்துவமனைகளில் இருந்துதான் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் முகக்கவசம் அணிவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

அதிமுக ஆட்சியில் அம்மா உணவக திட்டம் தொடங்கும்போது தனித்துறையே கிடையாது. அம்மா உணவகத் திட்டம் அவர்கள் கொண்டு வரும் பொழுது இட்லி – சாம்பார் மட்டும்தான் கொடுத்தார்கள். சட்னி கூட கொடுக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் அறிவித்ததை விட இரண்டு மடங்கு நிதி, அம்மா உணவக திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.