2026ம் ஆண்டு முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையான நேற்று கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் ‘மார்க்’, ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘தி பெட்’, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம் நடித்த ‘டியர் ரதி’ மற்றும் சென்ட்ராயன், முனிஸ்காந்த் ஆகியோர் நடித்த ‘காக்கா’, சிந்தியா நடித்த ‘அனலி’, சிவராஜ்குமாரின் ‘45’, ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’, ‘சல்லியர்கள்’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இந்த படங்களின் மினி இந்த தொகுப்பில் பார்ப்போம்….!
மார்க்
விஜய்கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள ஆக்சன் படம் மார்க். , நேர்மையான, அதிரடியான போலீஸ் ஆபீசரான மார்க்(சுதீப்) சஸ்பெண்டில் இருக்கிறார். அப்போது 18 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தகவல் வர, தனது ஆதரவு போலீஸ் டீம் உதவியுடன், அவர்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் மார்க் பட கதை. அந்த ஆபரேசனில் அரசியல், போதை மருந்து, காதல் கதைகளும், அதில் சம்பந்தப்பட்ட வில்லன்களும் வருகிறார்கள். அவர்களையும், அவர்களின் ஆதரவு ரவுடிகளை அடித்து துவைத்து எப்படி தனது பணியை மார்க் செய்கிறார் என்பதை முழுக்க ஆக் ஷன் படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் விஜய்கார்த்திகேயா.
சரக்கு அடித்து கொண்டு, போலீஸ் ஸ்டேஷனில் குத்தாட்டம் போட்டபடி அறிமுகம் ஆகும் கிச்சு சுதீப் சம்பந்தப்பட்ட பைட் சீன்களும், சேசிங் சீன்களும் படத்துக்கு பலம். மொத்தம் 5 பைட்மாஸ்டர்கள் இப்படத்தில் வேலை செய்து இருப்பதால் போட்டி போட்டு ஆக்சன் சீன்களை வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பைட் சீனிலும் தெரியும் கடும் உழைப்பு, அதனை ரசிக்க வைக்கிறது. வில்லன்களாக நவீன் சந்திரா, சைன் டாம் சாக்கோ, சோமசுந்தரம் ஆகியோர் மிரட்டியிருக்கிறார்கள். யோகிபாபு காமெடி கலந்த ரவுடியாக வருகிறார். அது செட்டாகவில்லை.
போலீஸ் அதிகாரிகளாக ரோஷினிபிரகாஷ், தீப்ஷிகா வருகிறார்கள். அவர்கள் நடிப்பு ஓகே. படத்தின் பிளஸ் சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு, காந்தாரா புகழ் அஜ்னீஷ் லோக்நாத்தின் பின்னணி, பாடல்கள். கன்னட படம் என்பதால் தமிழ் டப்பிங் சில இடங்களில் செட் ஆகவில்லை. ஓவர் வன்முறை, ரத்தம், சண்டை பலருக்கு பிடிக்காது. லாஜிக் பார்த்தால் படத்தை ரசிக்க முடியாது. ஆகசன் பிரியர்களுக்கு விருந்து.
டியர் ரதி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக நடித்த சரவண விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள படம் டியர் ரதி. கதைப்படி, அவருக்கு பெண்களை பார்த்தால் கூச்சம். அதனால், ஒரு வில்லங்க பார்லரில் அவருக்கு நட்பாகும் ஹீரோயின் ஹஸ்லியை அழைத்துக்கொண்டு கூச்சத்தை போக்க சென்னையை சுற்றுகிறார். வில்லன் ராஜேஷ் டீம், போலீஸ்காரர் சரவணன் பழனிசாமி ஹஸ்லியை தேடுகிறார்கள். ஹஸ்லியுடன் என்ன பிரச்னை? இவர்கள் அவர்களிடம் சிக்கினார்களா என்பதே டியர் ரதி படத்தின் கதை.
ரதி கேரக்டரில் வரும் ஹஸ்லியின் நடிப்பு, அவரின் கேரக்டரை ரசிக்க வைக்கிறது. அவரின் கேள்விகள், தைரியம், கிளைமாக்ஸ் அதிரடி ஆகியவை சூப்பர். நடிப்பு, அப்பாவிதனம், வித்தியாசமான ஆசைகளால் சரவண விக்ரமும் கவனிக்கப்படுகிறார். வில்லனாக வரும் ராஜேஷின் நடிப்பை பாராட்டலாம். படத்தில் ஆங்காங்கே வரும் சில கேரக்டர்கள், அவர்களின் தவிப்பு, டார்க் காமெடி சீன்கள் புதிதாக இருக்கிறது. ஆனாலும், குழப்பமான கதை, ஏற்றுக்கொள்ள முடியாத கிளைமாக்சால் படம் தத்தளிக்கிறது. வித்தியாசமான கதையை விரும்புகிறவர்களுக்கு, டார்க் காமெடியை ரசிப்பவர்களுக்கு பிரவீன் கே மணி இயக்கிய டியர் ரதி நிச்சயம் பிடிக்கும்
தி பெட்
எஸ், மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, ஜான்விஜய் ஆகியோர் நடித்துள்ள படம் ’தி பெட்’. ஐடியில் வேலை செய்யும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நாலு நண்பர்கள், கால் கேர்ள் சிருஷ்டியை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு செல்கிறார்கள். அங்கே ஒரு நாள் திடீரென சிருஷ்டி காணாமல் போக, நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்பட, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விஜய் துப்பறிகிறார். என்ன நடந்தது என்பது கதை.
ஸ்ரீகாந்த் நடிப்பு, ஊட்டி சம்பந்தப்பட்ட சீன்கள், சிருஷ்டி டாங்கே அடிக்கும் லுாட்டி, நண்பர்களின் தவிப்பு ஆகியவை படத்துக்கு பிளஸ். ஆனால், ஜான் விஜயின் விசாரணை மற்றும் அவரது நடிப்பு மைனஸ். கிளைமாக்ஸ் டுவிஸ்ட் புதிதாக இருக்கிறது. மற்றபடி, திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவு, தாஜ்நுாரின் பாடல்கள், இசை ஆகியவை சுமார் ரகம். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும்.
காக்கா
தேனி கே பரமன் இயக்கத்தில் இனிகோபிரபாகர், சென்ட்ராயன், முனிஸ்காந்த், ரோஷ்மின், சாய்தன்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள காதல் கலந்த காமெடி படம் காக்கா. மதுரையில் தனது திருமணம் தடைபட்டதால் தங்கை சாய்தன்யா மற்றும் பெற்றோர்களுடன் சென்னைக்கு வருகிறார் ஹீரோயின் ரோஷ்மின்.அவரை இனிகோ பிரபாகர் காதலிக்க, தங்கை சாய்தன்யாவை சென்ட்ராயன் காதலிக்கிறார்.ஆனால் திருமணம் நின்று போன கோபத்தில் சென்னைக்கு வரும் காமெடி கலந்த வில்லனான பரமன், ரோஷ்மினை திருமணம் செய்ய நினைக்கிறார். அதற்கு அரசியல்வாதியான முனிஸ்காந்த் உதவுகிறார். ஆனால், அவர் தங்கை மணிமேகலை பரமனை காதலிக்க, கடைசியில் யாருக்கு, யாருடன் திருமணம் நடந்தது என்பதை காமெடி கலந்து சொல்லும் படம் தான் காக்கா.
காதல், பெண் பார்க்கிற சீன்கள், போலீஸ் ஸ்டேஷன் சீன்கள், மதுரை, சென்னை பேக்ரவுண்ட் உள்ளிட்டவை ஓரளவு சிரிப்பு. கடைசி அரைமணி நேர திருமண காட்சிகள் சுந்தர்.சி படத்தை நினைவுப்படுத்துகின்றன. கூல்சுரேஷ் வந்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். மேலும் இயக்குனரே வில்லனாக வருகிறார். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் காதல் என படம் ஓகே ரகம். முனிஸ்காந்த் சம்பந்தப்பட்ட சீன்கள், அவர் டீம் செய்கிற சேட்டைகளும் ஆறுதல். சின்ன பட்ஜெட்டில் வளரும் நடிகர்கள் நடித்த காமெடி கதை.
சல்லியர்கள்
கிட்டு இயக்கத்தில் சத்யாதேவி, மகேந்திரன் நடித்துள்ள படம் சல்லியர்கள். இலங்கை தமிழர் போராட்டத்தில் சல்லியர்கள் என்ற மருத்துவ அணியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது. அவர்களின் சேவை, கடமை உணர்வு, தியாகம் எப்படிப்பட்டது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம். டாக்டராக நடித்த சத்யாதேவி, மகேந்திரன் நடிப்பு, போர்காட்சிகள், மருத்துவ அணி மீதான தாக்குதல், பிளாஷ்பேக் ஆகியவை உருக்கமானவை.
இப்படியொரு மருத்துவ அணி செயல்பட்டது. அங்கே இருந்த டாக்டர்கள் இப்படி பணியாற்றினார்கள் என்ற செய்தியும், ஒவ்வொருவரின் உயிரை காப்பாற்ற அவர்கள் எடுக்கும் முயற்சியும் மனதில் நிற்கிறது. பிளாஷ்பேக்கில் ஹீரோயின் சத்யாதேவி அப்பாவாக நடித்த கருணாஸ் நடிப்பு, முடிவு உருக்கம். தியேட்டர் பிரச்னை காரணமாக சல்லியர்கள் படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. படம் பார்த்தால் டாக்டர்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். அவர்கள் தியாகம் கண்கலங்க வைக்கும்.
அனலி
தினேஷ் தீனா இயக்கத்தில் சிந்தியா நடித்து வெளியாகியுள்ள படம் ’அனலி’. மாறுபட்ட களத்தில் நடக்கிறது. சக்திவாசு வில்லன் டீமுடன் மோதுகிறார் சிந்தியா. தனது காதல் கணவர் வாங்கிய ராணுவ விருது அடங்கிய பையை மீட்க சண்டைபோடுகிறார். அதில் ஜெயித்தாரா? வில்லன் இடத்தில் சிக்கிய தனது குழந்தையை மீட்டாரா என கதை செல்கிறது. ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகள், பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் பரவாயில்லை ரகம்.
ஜஸ்டிஸ் பார் ஜெனி
தனது தோழியான மருத்துவ கல்லுாரி மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு போராடும் ஒரு இளம் பெண்ணின் கதைதான் ’ஜஸ்டிஸ் பார் ஜெனி’. சந்தோஷ்ராயன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆஷிகா, சாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. முதற்பாதி விசாரணை, பிற்பாதி கோர்ட் டிராமா என நகர்கிறது.
45
கன்னடத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா ஆகியோர் நடித்தள்ள 45 படமும் தமிழில் டப்பாகி உள்ளது. டான் உபேந்திராவின் நாயின் சாவுக்கு காரணமாகிறார் ராஜ் பி ஷெட்டி. உன்னை 45 நாட்களில் கொல்வேன் என அவர் மிரட்ட, அவரை சிவராஜ்குமார் எப்படி காப்பாற்றுகிறார் என்பது 45 கதை. அர்ஜூன் ஜன்யா இயக்கியிருக்கிறார்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்















