அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ; சுற்றுப் பயண விபரம் வெளியீடு…!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரினரின் சுற்றுப் பயணத் திட்டத்தினை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை; எதிர்கால தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன.

அந்த வகையில், தமிழ் நாட்டு மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில், பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் பொருட்டு, ‘கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்’ தமிழ் நாடு முழுவதும் , வருகின்ற 7.1.2026 முதல் 20.1.2026 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட வேண்டும் என்றும்; கூட்டம் நடைபெறுவதற்கான மண்டபத்தை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் முன்பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலாளர்கள், மோட்டார் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ரயில்வே தொழிற்சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், அவர்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ, குழுவினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.