சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வலியுறுத்தினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.
2023-24-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். மறைந்த உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்களுக்கான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படியுங்கள் : இஸ்ரேலில் சிக்கித் தவித்த மேகாலயா எம்.பி. – குடும்பத்துடன் பத்திரமாக மீட்பு
சட்டமன்றம் கூடுவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில், அவரது தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்தனர். கவன ஈர்ப்பு தீர்மானங்களை அளித்ததுடன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாகவும் சபாநாயகரிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







