36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இலங்கையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.

இது தொடர்பாக மீன் வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று (25.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த 20.7.2023 அன்று  இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ” இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும் குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட  வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

மேலும், வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தவுள்ளது.

இம்மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். மீனவர்கள் சங்கங்களின் அழைப்பினை ஏற்று  தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் அனிதா  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading