திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் போட்டியிட்ட திருச்சிக் கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால், 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர முடியாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.