திமுகவை சேர்ந்தவர் என்பதால் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்த சொகுசு வசதிகளும் வழங்கப்படாது எனவும், கொடநாடு வழக்கில், குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி அடையாறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏதோ சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். முதல் வகுப்பில் அனைவருக்கும் என்ன சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறதோ அதேதான் அவருக்கும் வழங்கப்படுகிறது. குளிர்சாதன வசதிகள் எதுவும் இல்லாத ஒரு சாதாரண அறையில் தான் செந்தில் பாலாஜி தங்கி இருக்கிறார். வாரத்திற்கு ஆயிரம் ரூபாய் என்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் அவர் கேண்டீனில் உணவுகளை வாங்கி சாப்பிடலாம். வெளியில் இருந்து அவருக்கு எந்த உணவுகளும் உள்ளே அனுப்பப்படவில்லை.
நீங்கள் எல்லாம் நினைப்பது போல அமைச்சர் என்ற முறையிலோ, திமுகவைச் சேர்ந்தவர் என்ற முறையிலோ செந்தில்பாலாஜிக்கு எவ்வித கூடுதல் சலுகைகளும் வழங்கப்படவில்லை. சிறையில் அவர் அனைத்து வசதிகளுடனும் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் முதலமைச்சர் அனுமதி வழங்க மாட்டார்.
காவிரி பிரச்னை, அம்பேத்கர் படம் விவகாரம் என அனைத்தையும் முதல்வரின் அறிவுரைப்படி தான் செய்து வருகிறோம். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விலைவாசி குறைக்க ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். நாங்கள் விலைவாசியை கட்டுப்படுத்தி தான் வைத்திருக்கிறோம். கோடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஓ. பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். போராட்டம் நடத்துபவர்கள் நடத்தட்டும். காவல் துறையினர் முறையாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் நிச்சயம் தப்ப முடியாது. அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








