மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் கலவரத்தில் 2 பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்தும், அங்கு நடைபெற்று வரும் கலவரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20ஆம் தேதி முதல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதே விவகாரம் தொடர்பாக 4 – வது நாளான இன்றும் இரு அவையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
முன்னதாக எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் INDIA கூட்டணியை சேர்ந்த 26 கட்சி எம்பிக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது மணிப்பூர் பிரச்னை, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்பதால் இதுகுறித்து எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற முடக்கம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: “இந்த விவகாரத்தில் அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை அழைத்து பாஜக அரசு பேச வேண்டும். இதற்கு முன் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரிடம் ஆலோசனை கூறுவோம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அந்த நடைமுறை தற்போது இல்லை” என அவர் தெரிவித்தார்.







