முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து பிப்ரவரி 1& 2ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

“மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!
அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.  அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அதன் மூலம்  தமிழ்நாடு முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளனர்.

ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1ஆம் தேதியன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர்  பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிவார். மேலும் அன்று மாலை, நான்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத்தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன்  மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து  முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்.

பிப்ரவரி 1ம் தேதியே இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக அமைச்சர்கள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியத் துறைகளைச் சார்ந்த அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோர் மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ஆம் நாள் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தின் போது   முதலமைச்சரின் முன்னிலையில் இப்பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன்  முதலமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வினை மேற்கொள்வார்” என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிபின் ராவத் உயிரிழப்பு; நடந்தது என்ன? விரிவான செய்தி தொகுப்பு

Arivazhagan Chinnasamy

தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

EZHILARASAN D

சென்னை: இறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கொடூரம்!

Web Editor