“சென்னை சாலைகளே அரசின் சாதனை” என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சார்பாக நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் சாலைப் பணிகள், பாலப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சாலைப் பணிகளை விரைந்து முடிப்பது, பருவமழை காலத்திற்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பாலப்பணிகளை தாமதமின்றி முடித்து போக்குவரத்திற்கு திறந்துவிடுவது குறித்து அறிவுறுத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, எ வ வேலு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மேலும் பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” தொடர்ச்சியான ஆய்வுகளே தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தீவிர கவனம் செலுத்தி பிரச்னைகளுக்கு இடம் தராமல் உலகளாவிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
சீரான சாலைகளும் பாலங்களும்தான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாகும். குறிப்பிட்ட சில இடங்களில் தொய்வு காணப்படுகின்றது. தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டால் மக்கள் சிரமத்திற்குள்ளாகக்கூடும், அதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடும் என்பதால் உரிய காலத்திற்குள் பணிகளை முடித்திட வேண்டும்.
மாநில வளர்ச்சிக்கு சீரான சாலைகளும், மேம்பாலங்களும் அடிப்படை தேவையாக உள்ளது. தொய்வில்லா நிர்வாகத்தை ஏற்படுத்த தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன; உரிய காலத்திற்குள் சாலை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சாலைகள் சீராக உள்ளதற்கு ஆய்வு கூட்டங்கள் தான் காரணமாக உள்ளன; சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனைகளாக உள்ளன“ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







