மகாராஷ்டிரா மாநில அரசிலில் திடீர் திருப்புமுனையாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுப்படுத்தி, மாநிலத்தின் துணை முதலமைச்சராக ஆனதை தொடர்ந்து ”மீண்டும் கட்சியை கட்டியெழுப்புவேன்” என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்ததனால், மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட துவங்கியது. மேலும் சரத்பவாரின் இந்த அறிவிப்பை கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நிராகரித்ததோடு, அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 10ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சரத் பவார், புதிய
செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் ஃபிரபுல் படேல் ஆகியோரை நியமித்தோடு, கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அஜித் பவார் நேற்று 36 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியை பிளவுப்படுத்தி சென்றதோடு, மகாராஷ்டிரா மாநில அரசின் துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட அஜித் பவார் உட்பட 9 பேரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று மக்களை சந்திக்க புறப்பட்டார். மராட்டிய முன்னாள் முதல்வர் ஒய்.பி.சவான் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின் NCP தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பவார் உரையாற்றினார்.
அப்போது “மற்ற கட்சிகளை உடைக்கும் பாஜகவின் தந்திரங்களுக்கு நம் கட்சியினரும் இரையாகிவிட்டனர், மகாராஷ்டிராவிலும் நாட்டிலும் பாஜக வகுப்புவாத பிளவை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் அமைதியை விரும்பும் நம் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் இத்தகைய சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மேலும் இன்று, மகாராஷ்டிராவிலும், நாட்டிலும், சில நபர்கள் சாதி மற்றும் மதத்தின் பெயரால் சமூகத்தினரிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள், எனது போராட்டம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது, நான் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன்” என்று பவார் கூட்டத்தில் பேசினார்.