சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு!

சிடடெல் ஹென்றி என்ற லபெரியர் கோட்டையில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியும் பகுதியில் மலைகள், கடற்கரைகள், பாரம்பரிய சின்னங்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருவது வழக்கம். வடக்கு ஹைதியின் மிலாட் நகரில் மலை மீது சிடடெல் ஹென்றி என்ற லபெரியர் கோட்டை உள்ளது. பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் புரட்சியாளர் ஹென்றி கிறிஸ்டோப் தலைமையில் இந்த மலைக்கோட்டை கட்டப்பட்டது.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் இந்த மலைக்கோட்டையில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறையை முன்னிட்டு நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். அப்போது அங்கு திடீரென கனமழை பெய்தது. இதனால் அங்கிருந்தவர்கள் மழையில் நனைந்துவிடாமல் இருக்க பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். இதில் சுற்றுலாப் பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அது கூட்டநெரிசலாக மாறியது.

இந்த கூட்டநெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.