அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதேபோல மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது அண்ணன் மகனும், கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்ததனால், மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட துவங்கியது. மேலும் சரத்பவாரின் இந்த அறிவிப்பை கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நிராகரித்ததோடு, அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.
இந்நிலையில், ஜூன் 10ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சரத் பவார், புதிய செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் ஃபிரபுல் படேல் ஆகியோரை நியமித்தோடு, கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அஜித் பவார் நேற்று 36 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியை பிளவுப்படுத்தி சென்றதோடு, மகாராஷ்டிரா மாநில அரசின் துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட அஜித் பவார் உட்பட 9 பேரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பியுள்ள சரத்பவார், அதில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் உரிமை அந்த கட்சியின் தலைவரான தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சரத்பவாருக்கு கேரள மாநில தேசியவாத காங்கிரஸ் முழு ஆதரவை தெரிவித்துள்ளது. சரத்பவாருடன் துணை நிற்போம் என்று அம்மாநில மூத்த தலைவர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சரத்பவாருடன் தொலைபேசி மூலம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமது முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பி.ஜேம்ஸ் லிசா








