அதிமுக அரசு இருந்திருந்தால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் பூந்தமல்லியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் இருக்கிறது எனவும், அதிமுக அரசாக இருந்திருந்தால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
மக்களுக்கு தேவையான மருத்துவ முகாம் இதுவரை நடத்தப்படவில்லை எனவும், தொற்று நோய் பரவுவதற்கு முன்னதாக மருத்துவ முகாமை அரசு நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்த பழனிசாமி,
“அதிமுக அரசு மழைநீர் கால்வாய் பணிகளை செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.556 கோடியில் மழைநீர் கால்வாய்கள் அமைப்பதற்கான 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன” எனக் கூறினார். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணமாக பெற்றுத்தர வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.








