மாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்னைகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

மாணவர்களின் கல்வி சம்பந்தமாக உள்ள பிரச்னைகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த…

மாணவர்களின் கல்வி சம்பந்தமாக உள்ள பிரச்னைகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனிடையே கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய  மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவில் குழுக்களை நியமிக்கவும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தது.

வேலை இழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், “மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்னைகள் தான் உள்ளனவா? வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதை தெரிவிக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.