சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என இணைய வாயிலாக நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இணைய வாயிலாக ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது..
” ஒட்டு மொத்த இந்தியாவும் இணையத்தால் இணைந்துள்ளோம். சமூக நீதியை காக்கும் கடமை நமக்குத்தான் இருக்கிறது. எங்கெல்லாம் தீண்டாமை ஒடுக்குமுறை இருக்கிறதோ அதற்கு மருந்தாக இருப்பது சமூக நீதிதான்.
சமூக நீதி கருத்துகளை யார் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்களோ அதன்படி அதன் வெற்றியும் பயனும் இருக்கும். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கை தூக்கி விடுவதுதான் சமூக நீதி. இட ஒதுக்கீடு கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழங்கப்படுவதற்கு காரணமே அன்றைய சென்னை மாகாணம் தான். சமூக நீதியை நிலைநாட்டுவதில் கவனமாக இருக்கிறோம்.
சமூகம் மற்றும் கல்வி ரீதியாக இருந்த இட ஒதுக்கீட்டை வஞ்சகமாக அதில் பொருளாதாரத்தையும் பாஜக சேர்த்து விட்டது. பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல. ஏழையாக இருப்பவர் நாளை பணக்காரர் ஆகலாம், இன்று பணக்காரராக இருப்பவர் நாளை ஏழையாகலாம். ஏழை என்றால் அனைவரும் ஏழையாகத்தான் இருக்க முடியும் அது என்ன உயர் சாதி ஏழைகள்.
இட ஒதுக்கீடு கொடுப்பதால் தகுதி திறமை போய்விட்டது என்று சொல்லும் சிலர் பொருளாதார இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இதன் வன்மமான எண்ணத்திற்கு அதிக விளக்கம் சொல்லத் தேவையில்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் அனைத்து சமூக மக்களும் கல்வி கற்று வேலைக்கு போய்விடுகிறார்கள் என்ற வன்மம்தான் தகுதி திறமை போய்விட்டது என சொல்ல காரணம்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் உயர் சாதியினர் மட்டும் படிக்கலாம் என்பதை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடை பிரித்து வேறு இரண்டு சமூகத்தினருக்கு கொடுத்து மோதலை உருவாக்கி இருக்கிறார்கள். கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து இதை பாஜக செய்துள்ளது.
கர்நாடகாவில் சமூக நீதி வெளிப்படையாக கொலை செய்யப்பட்டுள்ளது. பட்டியலனத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தி அதன் தரவுகளை வெளியிட வேண்டும்.
சமூக நீதி பாதுகாப்பு ஆணையத்தை அனைத்து மாநிலத்திலும் தமிழ்நாடு போல அமைத்திட வேண்டும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதி பற்றிய புரிதலையும், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பூலே உள்ளிட்டோர் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில சுயாட்சி, கூட்டாட்சி, சமூக நீதி, சம்மதர்மம், மதச்சார்பின்மை உள்ளிட்டவை நாடு முழுவதும் கூட்டுக் குரலாக கூட்டணிக் குரலாக இருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.







