“தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்த வேண்டும்! அதுவே நம் இலக்கு!” – விசிக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம் என்பதால் அக்கட்சியை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள்…

தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம் என்பதால் அக்கட்சியை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற மாநாட்டை திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடத்தியது. திருமாவளவனின் மணிவிழா, கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, ‘இந்தியா கூட்டணி’யின் வெற்றிக் கால்கோல் விழா என்று முப்பெரும் விழாவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மாநாட்டை நடத்தியது. இதில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா? அதுபோலதான் திமுகவும், விசிகவும். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவோ – அரசியல் உறவோ அல்ல கொள்கை உறவு. இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. ஒன்றியங்களில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுய ஆட்சி அரசையும் உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதனால் தமிழ்நாட்டில் பாஜகவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது. இது தான் நம் இலக்கு. ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை காப்பாற்ற கண்டிப்பாக நாம் பாஜகவை வீழ்த்த வேண்டும்.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அங்கு தேர்தல் கிடையாது, அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டு சிறை. இது தான் பாஜக பாணி சர்வாதிகாரம்.

மத்தியில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை அகில இந்திய தலைவர்கள் உணர வேண்டும். பகைவர்களுடன் சேர்ந்து துரோகிகளையும் நாம் அடையாளம் காட்ட வேண்டும். இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை நாம் இருக பற்றிக்கொள்ள வேண்டும் .நாம் வெல்வோம், திருமாவளவனும் வெல்வார். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.