”MSME துறைக்கு ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கீடு“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கத்தில்…

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கலந்து கொண்டன.

விழாவின் தொடக்கமாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

“ சமூக நீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கலைஞர் கருணாநிதியின் இரு கண்கள்; சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான தனி கொள்கையை கலைஞர்  கருணாநிதிதான் உருவாக்கினார். அவரது வழியில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதியை ஊக்குவிக்கும் வகையில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின் மக்களும் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும்  புதிதாக 6 தொழிற்பேட்டைகளை உருவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக, தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல மாணவர்களுக்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் மூலம் சிறந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கான விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.