அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணிக் கட்சிகளான தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்…

அதிமுக கூட்டணிக் கட்சிகளான தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மதுரை, தேனி உட்பட 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும்,  புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.