செய்திகள்

வேளாண் நிதிநிலை அறிக்கை; பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு, விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  அழைப்புவிடுத்துள்ளார்.

எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு, விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு தொடர்பாக  வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டுவந்து, கிராமங்களின் தன்னிறைவினை ஏற்படுத்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், மானாவாரி நில மேம்பாட்டுத்திட்டம், பனை மேம்பாட்டுத்திட்டம், பாரம்பரிய நெல் இரகங்கள் மேம்பாட்டுத்திட்டம், தோட்டக்கலைக்கான பல்வேறு திட்டங்கள், வேளாண் இயந்திரமயமாக்குதல், சூரிய சக்தி பம்ப்செட்டுகள் திட்டம், 1.5 இலட்சம் வேளாண் பம்ப்செட்டுகளுக்கு மின்இணைப்பு, உழவர் சந்தைகளை புதுப்பித்தல், புதிதாக வேளாண் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

​மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கேற்ப, இன்று, (22.01.2023) திண்டுக்கல் மாவட்டத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் மாண்புமிகு வேளாண்மை (ம) உழவர்நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள், சங்கப்பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். தொடர்ந்து, 24.01.2023 அன்று திருநெல்வேலியிலும், 28.01.2023 அன்று சிவகங்கையிலும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

​இதுபோன்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன. இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை (ம) உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

​இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை கீழ்க்காணும் வழிகளில் தெரிவிக்கலாம்.

1. உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.

2. கடிதம் மூலம் தெரிவிப்பதற்கான முகவரி:

வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர்,
வேளாண்மை (ம) உழவர் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை – 600 009.

3. மின்னஞ்சல் முகவரி tnfarmersbudget@gmail.com

4. வாட்ச் ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி 9363440360

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றே, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்தகைய நடவடிக்கைகளை பயன்படுத்திக்கொண்டு, வேளாண்மையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை மேற்காணும் ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலகக்கோப்பை தொடர்: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு

NAMBIRAJAN

டிடிவி தினகரனுக்கு எதிரான மோசடி வழக்கு: அமலாக்கத்துறைக்கு புதிய உத்தரவு

Web Editor

வள்ளுவரும், பெரியாரும் தான் உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D