அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 40 பேர் நியமனம்- அமைச்சர் சேகர்பாபு

அனைவரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தின் கீழ் இதுவரை 40 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தஞ்சையில் கோயில் நிர்வாகங்கள் சார்பில் அடுத்த மாதம் 18 ம்தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழா…

அனைவரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தின் கீழ் இதுவரை 40 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் கோயில் நிர்வாகங்கள் சார்பில் அடுத்த மாதம் 18 ம்தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் திடலில் மகா சிவராத்திரி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தஞ்சை பெரிய கோயில் பிரகதீஸ்வரர் ஆலயம், கோவை பட்டீஸ்வரர் கோயில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிவராத்திரி விழா அந்தந்த கோவில் சார்பிலே நடத்தப்படுகிறது, தவிர அறநிலையத்துறை சார்பிலோ, தமிழ்நாடு அரசு சார்பிலோ நடத்தப்படவில்லை.

தஞ்சை பெரிய கோவிலுக்கு யானை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காட்டில் இருந்து யானையைக் கொண்டு வந்து வளர்க்கக் கூடாது. இதற்கு உபயதாரர்கள் யாரேனும் யானை நன்கொடையாக வழங்க முன் வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கிராம கோவில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்த நிதி ஒதுக்கீடு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏற்கனவே ஆயிரம்
திருக்கோவில்களுக்கு தருகிறோம் என்று கூறியிருந்ததை தற்போது 2,500
கோவில்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசில் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் விதத்தில் அனைத்து சாதியினரும் கோயிலின் கருவறைக்குள் நுழையும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தில் இதுவரை 40 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.