யாருடன் கூட்டணி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால்…….. – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு….!

தேமுதிகவிற்கு இனி வெற்றி ஒன்றுதான் கொள்கை என்று தேமுதிக பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தலைவருக்கான இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த். கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் தலைவர்‌ விஜயகாந்த் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கின்றார். தேமுதிகவுக்கு இணை வேறு கட்சியே இல்லை. நூறு..பீரு..சோறு..வழங்கினால் தான் மற்ற கட்சியினர் வருவார்கள்..ஆனால் தேமுதிக அப்படி இல்லை. தேமுதிகவை தரக்குறைவாக பேசும் எந்த கொம்பனுக்கும் எங்கள் தொண்டர்கள் பதிலளிப்பார்கள். 1971ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் துவங்கிய நாள் இன்று.

நீங்கள் யாரை சொல்கின்றீர்களோ. அவர்களோடு தான் கூட்டணி. எங்கள் தொண்டர்கள் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் கூட்டணி பேசமாட்டேன். தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாம் கூட்டணி அமைக்கும் கட்சி தான் வெற்றிபெரும். சாதி மதம் மொழிக்கு அப்பாற்பட்ட கட்சி தேமுதிக. தேமுதிகவிற்கு இனி வெற்றி ஒன்றுதான் கொள்கை.

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அமைச்சருக்கான தகுதி பெற்றவர்கள். இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் இணையில்லா மாநாடு இந்த மாநாடு. குருபூஜை இல்லை, எந்த பூஜை வேண்டுமென்றாலும் செய்வோம். அதனை கேட்க யாருக்கும் தகுதி இல்லை. தலைவர் என்பவர் அடுத்த தேர்தலை பார்ப்பவர் இல்லை. அடுத்த தலைமுறையை பார்ப்பவர்.

மாவட்ட செயலாளர்களுடன் கருத்து பெற்று கூட்டணி முடிவு செய்துள்ளேன். யாருடன் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பது தான் கேள்வி. தமிழகத்தில் எந்த கட்சியும் கூட்டணி அறிவிக்காத நிலையில் நாமும் யோசித்து பொறுமையாக தெரிவிப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும். சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம்..இனி சாணக்கியனாக வாழ்வோம். மற்ற கட்சிகள் அறிவிக்காத போது நாம் ஏன் முந்திரி கொட்டை போன்று அவசரப்பட வேண்டும்.

தெளிவாக சிந்தித்து தொண்டர்களுடன் ஆலோசித்து மகத்தான கூட்டணி அமைப்போம். வெற்றி ஒன்று மட்டுமே நம் கொள்கை. அவசரம் வேண்டாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.