கோபிசெட்டிபாளையம் குமணன் வீதி பகுதியில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வண்டிப்பேட்டை அருகே உள்ள குமணன் வீதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
எனவே இவரது அம்மா மற்றும் இவரது கணவர் இறந்தது கூட தெரியாமல் வீட்டிலேயே
இருந்துள்ளனர்.
இன்று காலை அருகில் வசிக்கக் கூடியவர்களுக்கு துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த கோபிசெட்டிப்பாளையம் காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இரண்டு பிரேதங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அங்கு இருந்த சாந்தியை விசாரித்த பொழுது இவர்கள் இரண்டு பேரும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே இறந்து விட்டதாகவும், தனக்கு எதுவும் தெரியவில்லை எனவும் தன்னிடம் பணம் எதுவும் இல்லாததால் இதை வெளியில் சொல்ல இயலவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வறுமையில் வாடும் சாந்தியிடம் கோபி காவல்துறையினர் தாங்களாகவே தங்களுடைய சொந்த செலவில் அடக்கம் செய்வதாக கூறியுள்ளனர். மேலும் இரண்டு பிரேதத்தையும் கைப்பற்றி காவல்துறை தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.
– யாழன்







