“சமரச பிரதமரால் இந்த மேசையில் அமர முடியாது!” மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

சீனாவில் டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் சந்தித்த ‘ஜி3’ தலைவர்கள் கூட்டத்தில் மோடியால் அவர்களுடன் பங்குபெற முடியாது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இந்த மூன்று தலைவர்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தியப் பிரதமர் இந்த மேசையில் அமர்ந்திருப்பார். சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமரால் ஒருபோதும் இந்த மேசையில் அமர முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ஜி3’ தலைவர்கள் சந்திப்பு

நவம்பர் 19ஆம் தேதி APEC உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஷென்சென் நகரில் டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் ஆகியோர் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று உலகத் தலைவர்களையும் குறிக்கும் வகையில் ‘ஜி3’ என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போர்கள் மற்றும் அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘அமைதியை நோக்கிய ரஷ்யா-சீனா-அமெரிக்கத் தலைவர்கள் பிரகடனம்’ (The Russia-China-US Heads of State Declaration Toward Peace) என்ற தலைப்பில் கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் மூன்று நாடுகளின் தலைவர்களும் வெளியிட்டனர்.

கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பது, அணுசக்தி தொடர்பான அபாயங்களைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்துவது ஆகியவற்றில் இணைந்து செயல்பட மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சூழல் குறித்தும் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், சர்வதேச பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியிலான நிலைத்தன்மையைப் பேணுவதற்கான உறுதியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த முத்தரப்புச் சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்த சீனாவுக்கு ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிபர்கள் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.