தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 61-வது கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, இன்று காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரைப் பெற்றுத்தருமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 147-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதன்படி, இந்தக் கூட்டத்தின் முடிவில், கர்நாடகம் தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.