காவிரி விவகாரம்: தமிழக அரசின் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகளைத்தான் தாக்கல் செய்வீர்கள் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகளைத்தான் தாக்கல் செய்வீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காவிரி ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடகா முறையாகச் செயல்படுத்த வேண்டும் எனவும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட 26.954 டி.எம்.சி நீர் பற்றாக்குறையை ஈடுசெய்ய உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு தரப்பில் முதல் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 6-ஆம் தேதி வரை தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரில் பற்றாக்குறையாக உள்ள 11.719 டி.எம்.சி (சுமார் 11 டி.எம்.சி) நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிடக் கோரி இரண்டாவது இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என அந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணையின் போது, தமிழக அரசின் புதிய மனு குறித்துக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகளைத்தான் தாக்கல் செய்வீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்த மேற்படி இரண்டு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அத்துடன், மூன்றாவதாகப் புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவையும் தள்ளுபடி செய்வதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அக்டோபர் 23-ஆம் தேதி காவிரி ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடகா உரிய நீரைத் திறந்துவிடவில்லை என்றும், அதனை வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை ஒரு வார காலத்திற்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்தப் புதிய மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.