தமிழக பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
“காவிரி நீரில் கூடுதலாக 11 டிஎம்சி தண்ணீரைப் பெற்றுத்தரக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது நமது விவசாயிகளுக்குப் பெரும் பின்னடைவாகும். காவிரி நீர்ப் பகிர்வு என்பது மழைப் பற்றாக்குறை, ஆற்றின் உண்மையான நீர்வரத்து, அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் வறட்சி காலங்களில் பின்பற்ற வேண்டிய நியாயமான நீர்ப் பகிர்வு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக அணுகப்பட வேண்டும். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலுவான ஆதாரங்களுடன் கூடிய சட்டப் போராட்டத்தை அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.
11 டிஎம்சி தண்ணீரின் முக்கியத்துவம்!
11 டிஎம்சி என்பது சுமார் 311.5 பில்லியன் லிட்டர் தண்ணீர். இந்த நீர் கிடைத்திருந்தால் சம்பா சாகுபடிக்கும், ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய ஆதரவாக இருந்திருக்கும். தமிழக விவசாயிகளுக்குத் தேவையான இந்த முக்கியமான நீரைப் பெற்றுத்தர தமிழக அரசு ஏன் தவறியது? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? நமது விவசாயிகளுக்குத் தேவை பதில் சொல்லாத சாக்குப்போக்குகள் அல்ல; உரிமையான தண்ணீரும் உறுதியான நடவடிக்கையும்தான்!
கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்கப் போவது எப்போது?
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று கர்நாடக முதலமைச்சரை அங்கே சந்தித்த தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வேண்டி எப்பொழுது அவர்களை காண செல்லப் போகிறார்… கல்வி விருது விழாவிற்கு ராகுல் காந்தியை அழைக்கும் முதலமைச்சர், கர்நாடகவை ஆளும் காங்கிரஸ் முதலமைச்சரிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும் உறுதிப்பாடோடு வாருங்கள் என்று உறுதியாக சொல்லப் போகிறாரா!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




