தமிழக அரசியல் வரலாற்றிலும், சமூகநீதிப் பயணத்திலும் முக்கிய மைல்கல்லாக விளங்கும் நீதிக்கட்சி உருவாக்கப்பட்ட நாள் இன்று (நவம்பர் 20). 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் உள்ளிட்ட தலைவர்களால் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது.
பின்னர் இந்த அமைப்பு, அதன் ஆங்கில நாளிதழான ‘ஜஸ்டிஸ்’ பெயரால் நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி, அரசுப் பணி மற்றும் அரசியல் அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டது. தமிழகத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் வரலாற்றில் நீதிக்கட்சிக்கு என்றும் முக்கிய இடம் உண்டு.
மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவு!
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக!
தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது!
இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது!
பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு!
தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! சமூகநீதி – பெண் விடுதலை – சுயமரியாதை – மாநில உரிமை – மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம்.
நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம். ” என்று அவர் தெரிவித்துள்ளார்.




