நியூஸ் 7 தமிழ், கரந்தை தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைகள் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் இன்று தொடங்கியது.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் முதல்வர் இரா. இராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகளின் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கரந்தை தமிழ்ச் சங்க செயலாளர் இரா. சுந்தரவதனம் தொடங்கி வைத்து உரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கு.சின்னப்பன் சிறப்புரை நிகழ்த்தினார். நியூஸ்7 தமிழின் பொறுப்பாசிரியர் கோ.சந்தான கிருஷ்ணன் நோக்கவுரை ஆற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் முதல் அமர்வில், ஊடகம் ஓர் அதாணிகோட்டம் ஆர்.சி.பள்ளியின் தாளாளர் முனைவர் ச.ஆரோக்கியதாஸும், இரண்டாவது அமர்வில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சிறப்புச் செய்தியாளர் செ.தீபக் கார்த்திக்கும் உரையாற்றினர்.
மேலும் மூன்றாவது அமர்வில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் மூத்த பொறுப்பாசிரியர் எஸ்.சரவணன், தொலைக்காட்சி செய்திகள் – ஆக்கமும் ஊக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதேபோல் நான்காவது அமர்வில், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ், இணைய ஊடகம் குறித்து மாணவர்களிடையே விளக்கமாக விவரித்தார். இந்த பயிற்சிப்பட்டறை தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக கிராமப்புறங்களில் இருந்து வருகை தந்திருந்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். முதல் நாள் நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ப. ஜெயராஜ் நன்றியுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற உள்ள அமர்வுகளில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன், தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சிறப்புச் செய்தியாளர் எஸ்.குமரேசன், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வெ.ஜீவக்குமார் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். அதேபோல், சமூக ஊடகங்களை கையாளும் விதம் குறித்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் துணையாசிரியர் ஜோ.மகேஸ்வரன் விவரித்துப் பேசவுள்ளார்.
மேலும் நாளை நடைபெறவுள்ள நிறைவு விழாவில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் எஸ்.டி.தியாகச்செம்மல் நிறைவுப் பேருரை ஆற்றுகிறார். அத்துடன் ஊடகப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.