முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல் செய்திகள் Health

மாதவிடாய் விடுப்பு அவசியமானதா? – நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மாதவிடாய் விடுப்பு’ வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக 73 சதவீத வருகையுடன் செமஸ்டர் தேர்வுகளில் மாணவிகளால் பங்கேற்க முடியும். மேலும் மாநில உயர்கல்வித் துறை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளும் 60 நாட்கள் வரை பேறுகால விடுப்பு பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வெளியான இந்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளையும், வரவேற்புகளையும் குவித்து வரும் நிலையில், எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் மாதவிடாய் விடுப்பு இதற்கு முன்பும் இருந்துள்ளது. சுதந்திரம் அடைவதற்கு முன்பே, கொச்சி சமஸ்தானத்தின் (தற்போதைய எர்ணாகுளம் மாவட்டம்) திருப்புனித்துராவில் உள்ள அரசு பெண்கள் பள்ளி, 1912ஆம் வருட ஆண்டுத் தேர்வின் போது ‘பீரியட் லீவ்’ எடுத்து கொள்ளவும், விடுபட்ட தேர்வை மாணவிகள் பின்னர் எழுதிக்கொள்ளவும் அனுமதித்தது. 1992 முதல் பீகார் அரசு, அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் சிறப்பு மாதவிடாய் விடுப்பு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசின் ‘மாதவிடாய் விடுப்பு’ அறிவிப்பு குறித்து மகப்பேறு மருத்துவர் சாந்தியை அணுகிய போது, “இந்த அறிவிப்பு கட்டாயம் பாராட்டுக்குரியது. எனினும் மாதவிடாய் ஒரு நோய் அல்ல என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மாதவிடாய் என்பது ஒவ்வொரு பென்ணுக்கும் அவரது உடல் நலம், ஆரோக்கியம் அடிப்படையில் வேறுபடும். அவரவரின் வலி, இரத்தப்போக்கு பொறுத்து சிலருக்கு விடுப்பு தேவைப்படும், சிலருக்கு தேவைப்படாது. ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் விடுப்பு தேவைப்படும் பட்சத்தில், அது மறுக்கப்படுவதையோ அல்லது கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையோ தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு நிச்சயம் வரவேற்புக்குரியது” என தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

மேலும் ‘மாதவிடாய் விடுப்பு’ குறித்து வழக்கறிஞர் ஆதிலஷ்மியை தொடர்பு கொண்டு பேசியபோது, “பொதுவாக பேறுகால விடுப்பு என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அதே சமயம் மாதவிடாய் விடுப்பை ஆச்சரியமாகவோ, புதியதாகவோ பார்க்க வேண்டியதில்லை. சமூகத்தில் காலகாலமாக நம் குடும்பங்களே நமக்கு ஓய்வு என்கிற அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஒன்றை தற்போது கேரள அரசு விடுப்பாக அறிவித்தது நிச்சயம் ஏற்க கூடியதாக பார்க்க வேண்டும்.

மருத்துவ ரீதியாகவும் பெண்களுக்கு பிஎம்எஸ் எனப்படும் ப்ரீ மென்சுருவல் சிண்ட்ரோம் இருக்கக்கூடிய பட்சத்தில் கோவம், எரிச்சல் என அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்ற சமயங்களில், இந்த விடுப்பை அவர்களுக்கு அவசியமான ஒன்றாக பார்ப்பதே சரி. விடுப்பு எடுத்து கொள்வதும், எடுத்து கொள்ளாததும் அவரவர் தேவையை பொறுத்தது. இதை ஆண் -பெண் சமநிலை, எல்லா பெண்களுக்கும் இந்த விடுப்பு அவசியமா? என்ற கோணத்தில் ஆராய வேண்டியதில்லை.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட உடல் சம்பந்தமான விஷயமாக அவரின் உடல் சிரமத்தையும், மன அழுத்தத்தையும் கருத்தில் வைத்து காண்பது தான் சரியானது. ஒரு பெண்ணின் ஆரோக்கியம் என்பது அவரின் மனநிலை, உடல்நிலை பொறுத்து அமைவதால் இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமா பார்க்க வேண்டும்” என வழக்கறிஞர் ஆதிலட்சுமி தன் கருத்துகளை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

G SaravanaKumar

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி

Arivazhagan Chinnasamy

ஆயுத பூஜைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள்!

G SaravanaKumar