ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி, மாரக்காள் ஆகிய 4 பேரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உள்ள வண்ணான் குட்டை காப்புக்காடு பகுதியில் சுண்டைக்காய் பறிக்கச் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை யானையைப் பார்த்ததும், நான்கு பேரும் தப்பி ஓட முயன்றனர். அப்போது மசனி என்பவரை யானை துதிக்கையால் பிடித்து காலால் மிதித்துத் தாக்கியது. பொம்மி என்ற பெண்ணையும் காட்டு யானை தாக்கியது. இந்த சம்பவத்தில், மசனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பொம்மி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, தோட்ட வேலைக்குச் சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். நல்லூர்காடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, சக பணியாளர்களுடன் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை, பழனிசாமியை விரட்டிச் சென்று தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய தாண்டிக்குடி காவல்நிலைய போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







