“ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்” – அதிபர் டொன்லாடு டிரம்ப்!

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொன்லாடு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வடமேற்கு நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்களை குறிவைத்து கொடூரமாக கொலை செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் எனது உத்தரவின்பேரில் சக்திவாய்ந்த, கொடிய தாக்குதலை நடத்தியுள்ளது.

கிறிஸ்தவர்களை கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே பயங்கரவாதிகளுக்கு நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் தனது அபாரமான திறமையால் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. எனது தலைமையின் கீழ் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது.

அமெரிக்க ராணுவத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உயிரிழந்த பயங்கரவாதிகள் உள்பட, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், பயங்கரவாதிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.