முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் குறித்த விமர்சனங்கள், சர்ச்சையாகி, கருத்து மோதலாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடம் அருகே பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன் கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைகிறது. மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி சிலை கட்டமைப்பை முன்மாதிரியாக கொண்டு அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மு.கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பாலம் தரையின் மேல் 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் தூரம் இருக்கும். இந்த பகுதிக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
பேனா நினைவுச் சின்னம் கடலில் அமைவதால், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவும் வேண்டும். இதன்படி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஜனவரி 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் எழுந்தன.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, ‘நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை. அதை கடலில் வைக்க கூடாது என்கிறேன். நிதியில்லாமல் பள்ளிகளை பராமரிக்க முடியவில்லை. இப்போது அரசு செலவில் பேனா நினைவுச் சின்னம் அவசியமா?’ என்று கேள்வி எழுப்பினார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ’எதிர்ப்புகளை மீறி பேனா நினைவுச் சின்னத்தை கடலில் வைத்தால், ஒரு நாள் அதை உடைப்பேன்’ என்று சீமான் பேசியது சர்ச்சைத் தீயைப் பற்ற வைத்தது. கூட்டத்தில், வாக்குவாதமும் ஏற்பட்டது.
சீமான் பேச்சுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் மட்டுமின்றி கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களும் பதில் அளித்தனர். பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நினைவுச் சின்னம் அமைவதால், ‘சுற்றுச் சூழல், கடல் வளம் பாதிக்கப்படாது. ஆனால், பாதிக்கப்படும் என்று தவறான கருத்தை, சர்ச்சையை பரப்புகிறார்கள்’ என்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அனைத்துவிதமான ஒப்புதல்களும் பெற்ற பிறகே பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான கருத்துகளும் அதனால் எழுந்து வரும் சர்ச்சையும் இந்த அளவிற்கு இருக்கும் என்றும் முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால், சர்ச்சையை தவிர்க்கும் வகையில், திட்டத்தை கைவிடலாமா? அல்லது தற்காலிகமாக ஒத்தி வைக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது…
சர்ச்சைகளுக்கும் கருத்து மோதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா…? திட்டமிட்டபடி பேனா நினைவுச் சின்னம் அமையுமா..? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது குறித்து நியூஸ் 7 “தமிழில் சொல் தெரிந்து சொல்” பகுதியில் வெளியான காணொளியை காண…. லிங்க் –







