முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

திமுகவில் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

கட்டுரையாளர்

திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், அமைப்புச்செயலாளர் ஆகியோர் முதற்கட்ட வரிசையில் உள்ளனர். திமுகவின் அத்துனை நிகழ்வுகளிலும் மரபுப்படி மேடையில் அமரக்கூடியவர்களாகவும் உள்ளனர். திமுகவில் முதன்மையானதாக தலைவர் பதவி இருந்தாலும், கட்சி அமைப்பு ரீதியாக அதிகாரமிக்க பதவியாக பொதுச்செயலாளர் பதவி உள்ளது.

 

தலைவரின் ஆலோசனைப்படி பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும் என்பதே விதியாக உள்ளது. திமுகவை தோற்றுவித்தபோது பொதுச்செயலாளர் பொறுப்பே முதல் தலைமை பொறுப்பாக இருந்தது. திமுகவின் முதல் பொதுச்செயலாளர் அண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துணைப்பொதுச்செயலாளர்கள் யார்?

 

பொதுச்செயலாளர் தனக்கு உதவியாக எத்தனை துணைப்பொதுச் செயலாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம் என்பது திமுகவின் விதியாக இருக்கின்றது. திமுகவின் கட்சி விதிப்படி, 3 துணைப் பொதுச்செயலாளர்கள் இருந்து வந்தனர்.

ஒருவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என மூன்று பேர் நியமனம் குறித்த வரையறை இருந்தது.

 

துணைப்பொதுச்செயலாளராக இருந்தவர்கள் தான் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. மேடைகளை அலங்கரிப்பது என்றில்லாமல் திமுகவின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான ஆலோசனை கூட்டங்கள், அமைக்கப்படும் குழுக்கள், தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு என பலவற்றிலும் பங்களிக்கக்கூடியவர்களாகவும் உள்ளனர்.

துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுக்குழுவின் போது திமுக சட்டத் திட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் துணைப் பொதுச் செயலாளர்களாக சற்குணப் பாண்டியன், வி.பி. துரைசாமி, ஐ. பெரியசாமி ஆகியோருடன் சுப்புலட்சுமி ஜெகதீசனும் துணைப்பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது துணைப் பொதுச்செயலாளர்கள் 3 பேர் என்ற எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டு வி.பி. துரைசாமி பாஜகவிற்கு சென்றபிறகு, அந்த இடத்திற்கு அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.

கட்சியில் ஒதுங்கும் சுப்புலட்சுமி

ஆனால் 2016 ஆம் ஆண்டு சற்குண பாண்டியன் மறைவடைந்தாலும் அந்தப் பொறுப்பு நிரப்பப்படாமேலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தி கடந்த செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோருடன் பொன்முடி, ஆ. ராசா ஆகியோரும் துணைப்பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். மத்திய, மாநில அமைச்சர், தடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர் என பல்வேறு பின்புலம் கொண்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக திமுகவின் முக்கிய நிகழ்வுகளை தவிர்க்கும் சூழல் காணப்பட்டது.

 

வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உடல்நல பாதிப்பே முதன்மையானதாக இருந்தது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே, வெற்றி பெற்றால் அமைச்சராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், அதற்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை இல்லை என அவர் வருத்தப்பட்டதாகவும்

கூறப்பட்டது. வயது, உடல்நலம் காரணமாக ஆகஸ்ட் மாதம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும் கடிதம் அளித்துள்ளார்.

மு.பெ. சாமிநாதனுக்கும் வாய்ப்பு?

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகின்றது. 72 மாவட்டங்களின் செயலாளர் பொறுப்பிற்கு செப்டம்பர் 22 முதல் 25 வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகின்றது. தேர்தல் முடிவடைந்தவுடன் திமுகவின் பொதுக்குழு கூடவுள்ளது. நிர்வாகிகளுக்கு பொதுக்குழு எதிர்பார்ப்பிற்குரியது என்றாலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய உட்கட்சி தேர்தல் முடிவடைந்து கூடும் பொதுக்குழுக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு மிகுந்ததாக அமையும்.

துணைப்பொதுச்செயலாளருக்கான எதிர்பார்ப்புடன்

மூத்த நிர்வாகிகளான ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு போன்றோர் உள்ளனர்.

எதிர்பார்ப்புகள் இருந்தாலும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கும்போது, அந்த மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமைக்கு உள்ளது.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டபோது, அந்தப்பொறுப்பில் இருந்த மு.பெ. சாமிநாதனுக்கு திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மாவட்ட அமைப்புகளில் மாற்றம் செய்து செப்டம்பர் 18 ஆம் தேதி அறிவித்தபோது அந்த மாவட்டம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள சாமிநாதனுக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த பெண் துணைப்பொதுச்செயலாளர்?

 

துணைப்பொதுச்செயலாளராக இருந்தபோது வயது முதிர்வினால் விலகிக்கொள்வதாகவும், அந்த பதவியை கனிமொழிக்கு அளியுங்கள் என அப்போது தலைவராக இருந்த கருணாநிதியிடம் சற்குண பாண்டியன் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டாலும், சற்குண பாண்டியன் 2016 இல் மறைந்த பிறகு அந்த வாய்ப்பு யாருக்கும் வழங்கப்படாமலேயே இருந்தது.

பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி, ஹெலன் டேவிட்சன், சல்மா உள்ளிட்டோர்

மாநில நிர்வாகிகளாக இருந்தாலும், இவர்களில் ஒருவரா அல்லது வேறு யாருக்கு அளிக்கப்ப்போகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரு சில வாரங்களில் திமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில் மாவட்டச்செயலாளர்கள் மாற்றம், துணை அமைப்புச்செயலாளர்கள் நியமனம், துணைப்பொதுச்செயலாளர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் முடிவுகளை மேற்கொள்வதற்காக தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அடுத்து வரும் நாட்களில் திமுகவின் முதன்மை பொறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெரியவரலாம்..

 

இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி

Web Editor

தென்கொரியா பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த வாணியம்பாடி இளைஞர்

EZHILARASAN D

கள்ளக்குறிச்சி வன்முறை; சிறப்பு விசாரணைக்கு 56 போலீசார் நியமனம்

G SaravanaKumar